மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆயிரமாவது ஒருநாள் ஆட்டத்தில், டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடா அறிமுக ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டார். இதை அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
சஹால், சுந்தர் சுழலில் சிக்கி இருப்பினும், பொறுப்பாக ஆடிய ஹோல்டர், 71 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வேகபந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, 176 ஓட்டங்களுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியை சுருட்டியது.
இந்திய அணி சார்பாக சஹால் நான்கு விக்கெட்டுகளையும் சுந்தர் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர். 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர். இஷான் கிஷன் 28 ஓட்டங்களுக்கு தனது விக்கெட் பறிகொடுத்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 60 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். நடு வரிசையில் களமிறங்கிய விராத் கோலி (8), ரிஷப் பந்த் (11) ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா இருவரும் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சூர்யகுமார் 34, தீபக் ஹூடா 26 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் ஆயிரமாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.