இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 223 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன.
13 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரிஷப் பண்ட் (100 ரன்கள் நாட் அவுட்) தவிர வேறு எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 67.3 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 212 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதை நோக்கி தென்ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 29.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து இருந்தது.
இதையடுத்து, இன்று 4- ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
63.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 212- ரன்களை தென் ஆப்பிரிக்க அணி எட்டியது.
தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 82 ரன்கள் குவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் தன் வசப்படுத்தியது.