• Fri. Jul 26th, 2024

இங்கிலாந்து வீரர்களை இனரீதியாக கடுமையாக விமர்சிக்கும் மக்கள்!

Jul 15, 2021

யூரோ கால்பந்து போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியிலுள்ள கருப்பின விளையாட்டு வீரர்களை சமூக ஊடகங்களில் மக்கள் இனரீதியாக கடுமையாக விமர்சித்து அவமதித்து வருகிறார்கள்.

குறிப்பாக கருப்பின வீரர்களான Marcus Rashford, Jadon Sancho மற்றும் Bukayo Sako ஆகியோர், பெனால்டி முறையில் போடும் கோல்களைத் தவறவிட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவர்கள் மூவரும் மோசமான விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

வீரர்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் ஒரு பக்கம், நம்மால் அவர்களுக்கு ஏதாவது நன்மை இருந்தால் மட்டுமே இவர்களுக்கெல்லாம் கருப்பினத்தவர்களான நம்மைப் பிடிக்கும் என கருத்து தெரிவித்த அமெரிக்க கருப்பின தடகள வீராங்கனையான Gwen Berry மறுபக்கம் என செய்திகள் வெளியாகியுள்ள அதே நேரத்தில், வீரர்களுக்கு ஆதரவாக மக்கள் செய்யும் செயல்கள் குறித்த செய்திகளும் வெளியாகி ஆறுதலை ஏற்படுத்தியுள்ளன.

அவ்வகையில், சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்த அடையாள அட்டை தேவை என்று கோரும் புகார் மனு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 650,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

பிரபலங்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த புகார் மனு, பேஸ்புக், ட்விட்டர் முதலானவற்றை யார் பயன்படுத்துகிறார்கள் (அவதூறாக விமர்சிப்பவர்கள் யார்) என்பதைக் கண்டுபிடிக்கும் வகையில், அவர்கள் அடையாள அட்டை போன்ற ஒரு விடயத்தை பயன்படுத்தினால் மட்டுமே சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படவேண்டும் என்கிற வகையில் ஒரு விதியைக் கொண்டு வரவேண்டும் என கோரியுள்ளது.

இன்னொரு பக்கம், கால்பந்து ரசிகைகள் மூன்று பேர் சேர்ந்து, இன ரீதியாக விமர்சிப்போர், வாழ்நாள் முழுவதும் இங்கிலாந்தில் நடைபெறும் எந்த கால்பந்து போட்டியிலும் பங்கேற்க தடை விதிக்கக்கோரி பிரச்சாரம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள். அதற்கு ஆதரவாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், கால்பந்து வீரர்களை விமர்சித்தவர்களை தேடிப்பிடிக்க உதவுமாறு அமைச்சர்கள் பேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.