
சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தரப்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றுள்ளார்.
ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா, 2 போட்டிகளை டிரா செய்தார். மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் கருப்பு காய்களை தேர்வு செய்து பிரக்யானந்தா விளையாடினார்.
ஆட்டத்தின் 39வது நகர்வின்போது, மேக்னஸ் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை, சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் தோற்கடித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு முன்பாக மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் தோற்கடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் 16 சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் ஒவ்வொரு வீரருக்கும் 3 புள்ளிகளும், டிரா செய்வோருக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும். முதல் சுற்று முடிவதற்கு இன்னும் 7 ஆட்டங்கள் உள்ளன.