• Wed. Mar 27th, 2024

மகன் மற்றும் தந்தை இறந்தும் சதம் விளாசிய விஷ்ணு சோலங்கி

Feb 28, 2022

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பி சுற்று போட்டிகள் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பரோடா- சண்டிகர் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் பிறகு ஆட தொடங்கிய பரோடா அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது. குறிப்பாக அந்த அணியின் விஷ்ணு சோலங்கி 165 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் பரோடா அணி 517 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நேற்று நடைபெற்ற 5-வது நாள் ஆட்டத்தில் சண்டிகர் அணி 473 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவானது.

இந்த போட்டியில் பரோடா அணி அணி சார்பாக சதம் அடித்த இளம் வீரர் விஷ்ணு சோலங்கிக்கு கடந்த 10-நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது. இவர் ரஞ்சி போட்டியின் பயிற்சியில் இருந்த போது பிறந்து 1 நாளே ஆன இவரது குழந்தை இறந்தது. அணி நிர்வாகம் இவரை தனது குடும்பத்தினருடன் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியும் இவர் மீண்டும் அணிக்கு திரும்பி சதம் விளாசினார்.

இந்த நிலையில் நேற்று 5 -வது நாள் போட்டியின் போது இவரது தந்தை இறந்துள்ளார். இது குறித்து அணி நிர்வாகம் அவரிடம் தெரிவித்த போது அவர் இந்த போட்டி முடிந்த பின்னரே தான் செல்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் தனது தந்தையின் இறுதி சடங்கை வீடியோ கால் மூலம் விஷ்ணு சோலங்கி பார்த்துள்ளார். இவரது அர்ப்பணிப்பு உணர்வை கண்டு பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.