• Fri. Nov 22nd, 2024

விராட் கோலி குடும்பத்தினரை மிரட்டுவதா? இன்சமாம் உல் ஹக் கண்டனம்

Nov 1, 2021

கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியடைந்ததற்காக விராட் கோலி குடும்பத்தினரை மிரட்டும் விதமாக பேசுவது கடுமையான கண்டனத்தக்குறியது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

பின்பு மீண்டும் நேற்றை நடைபெற்றப் போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தத் தோல்விக்கு காரணம் கேப்டன் கோலிதான் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதில் ஒருசிலர் விராட் கோலியின் மகள் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிரட்டும் விதமாக பேசி வருகின்றனர்.

இது குறித்து பேசியுள்ள இன்சமாம் உல் ஹக் “விராட் கோலி மகள் மீது மிரட்டல் விடுக்கப்படுவதாக செய்திகள் மூலம் நான் அறிய வந்தேன். கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் வேறு நாடுகளுக்கு விளையாடுகிறோமே தவிர நாங்கள் எல்லோரும் கிரிக்கெட் வீரர்கள். கோலியின் பேட்டிங், அவரது கேப்டன்சியை விமர்சனம் செய்யலாம். ஆனால் யாருக்கும் அவரின் தனிப்பட்ட குடும்பத்தை தாக்கி பேசுவதும், மிரட்டுவதும் தவறான விஷயம். இது கண்டனத்துக்குறியது” என்றார்.

மேலும் பேசிய அவர் “சில நாள்களுக்கு முன்பு இதேபோல தான் முகமது ஷமியும் சமூக வலைத்தளங்களில் தாக்கப்பட்டார்.

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். கோலியின் குடும்பத்தை அவதூறாக பேசுவது என் மனதை மிகவும் பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்பு நியூசிலாந்து அணியுடனான போட்டி மிகவும் முக்கியமானது.

ஆனால் இந்தியா இப்படி விளையாடும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒட்டுமொத்த அணியினரும் கடும் அழுத்தத்தை உண்ரவதாக நினைக்கிறேன். இப்படியொரு இந்திய அணியை நான் பார்த்ததே இல்லை” என்றார்.