• Fri. Nov 22nd, 2024

ஸ்கொட்லாந்தை வென்றது நியூசிலாந்து!

Nov 3, 2021

ஸ்கொட்லாந்துக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (3 ) நடைபெற்ற மிக முக்கிய குழு 1க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 16 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.

இந்த வெற்றியுடன் குழு 2 இலிருந்து அரை இறுதிக்கு இரண்டாவது அணியாக செல்வதற்கான தனது வாய்ப்பை நியஸிலாந்து சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

35 வயதான மார்ட்டின் கப்டிலின் அதிரடி துடுப்பாட்டம் நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியது.

இப் போடடியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.

நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் ஒரு புறத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் மார்ட்டின் கப்டில் தனி ஒருவராக அதரடியாக ஓட்டங்களைக் குவித்து நியூஸிலாந்துக்கு பலம் சேர்த்தார்.

56 பந்துகளை எதிர்கொண்ட மார்ட்டின் கப்டில் 7 சிக்ஸ்கள், 6 பவுண்ட்றிகளுடன் 93 ஓட்டங்களை விளாசி 7 ஓட்டங்களால் சதத்தைத் தவறவிட்டார்.

இவரைவிட க்லென் பிலிப்ஸ் 33 ஓட்டங்களைப் பெற்றார். மார்ட்டின் கப்டிலும் கிலென் பில்ப்ஸும் 4ஆவது விக்கெட்டில் 105 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் சபியான் ஷரிப் 28 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களையும் ப்றெட் வீல் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மத்தியவரிசை வீரர் மைக்கல் லீக் 20 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைக் குவித்தார்.

இவரை விட மெத்யூ க்ரொஸ் 27 ஓட்டங்களையும் ஜோர்ஜ் மன்சே 22 ஓட்டங்களையும் ரிச்சி பெரிங்டன் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷ் சோதி 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.