மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சினிமா, அரசியல் என ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்து வருகிறார்.
கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், விக்ரம் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதுதவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்கிடையே கடந்த 16-ந் தேதியன்று, மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமிக்க இந்திய கதர் ஆடைகளை பிரபலப்படுத்தும் வகையிலான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் வட அமெரிக்க குழு நிர்வாகிகளை சிகாகோவில், கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய கமல்ஹாசனுக்கு உடல்நிலையில் மாற்றம் காணப்பட்டது.
அதாவது லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்தது. உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த கமல்ஹாசன் சென்னையை அடுத்த போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவரை தனிமைப்படுத்தி டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை கமல்ஹாசனே உறுதிப்படுத்தினார்.
கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசனிடம் தொலைபேசியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், உடல் நலம் குறித்து விசாரித்தார்.