• Sat. Mar 23rd, 2024

அரசியலுக்கு வருவேன்; பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

Sep 11, 2021

மக்கள் தனக்கு ஆதரவளித்தால் அரசியலுக்கு வருவேன் என பிரபல நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது.

விஜய் இயக்கியுள்ள இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்துள்ளார்கள். படத்தின் இசை – ஜி.வி. பிரகாஷ்.

தலைவி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இப்படம் தொடர்பாக தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கங்கனா கூறுகையில்,

நான் அரசியல்வாதி அல்ல. ஆனால் பொறுப்பான குடிமகளாக என் நாட்டுக்காகக் குரல் கொடுக்கிறேன். நான் அரசியலில் நுழைவது பற்றி கேட்கிறீர்கள். அதற்கு மக்களின் ஆதரவு தேவை.

தற்போது நடிகையாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். வருங்காலத்தில் மக்கள் என்னை விரும்பி, எனக்கு ஆதரவு அளித்தால் அரசியலில் நுழைய ஆர்வமாக உள்ளேன்.

தலைவி படம் சர்ச்சை எதையும் உருவாக்கவில்லை. இதற்காக இயக்குநரைப் பாராட்ட வேண்டும். ஆளுங்கட்சிக்குக் கூட படத்தில் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றும் கங்கனா கூறினார்.