• Tue. Mar 26th, 2024

விஜய்க்கு ஒரு இலட்சம் அபராதம் – கதாநாயகர்கள் ரீலாக இல்லாமல் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்!

Jul 13, 2021

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசுக் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதாநாயகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை இறக்குமதி செய்துள்ளார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும் நுழைவு வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், காருக்கு இறக்குமதி வரி முழுமையாக செலுத்தப்பட்ட நிலையில் நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த வரியை செலுத்தாததால் வாகனத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்காமல் காரை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் விஜய் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை என்றும், வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர் நடிகர் என்பதைத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் , வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் தனது உத்தரவில் நீதிபதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளும் அளவிற்கு நடிகர்கள் வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

ரிட் மனு தாக்கல் செய்துவிட்டு, அதை 9 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு நீதிபதி உத்தரவிட்டதுடன், அந்த ஒரு லட்சம் ரூபாய் நிதியை அபராதமாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.