ரஜினியின் அண்ணாத்த ரசிகர்களை சோதித்தாலும் படம் போட்ட பணத்தை எடுத்துவிட்டது.
நெட்பிளிக்ஸில் அண்ணாத்த தமிழ் பதிப்பு முதலிடத்திலும், இந்தி இரண்டாவது இடத்திலும், தெலுங்கு ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.
ஒரு படத்தின் பல மொழிப் பதிப்புகள் டாப் டென்னில் இதுவரை இடம்பெற்றதில்லை என்கிறார்கள். சுருங்கச் சொன்னால் ஓடிடியிலும் படத்தைப் பார்க்க ரசிகர்கள் குழுமுகிறார்கள்.
இந்நிலையில் ரஜினி அடுத்து யார் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி பலவேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
அந்தவகையில் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குகிறவர் பட்டியலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும், கார்த்திக் சுப்புராஜும் முதலிடத்தில் இருந்தனர்.
தேசிங்கு பெரியசாமிக்கே அதிர்ஷ்டம் அடிக்கும் என்றனர். ஆனால், இப்போது மூன்றாவதாக ஒருவர் ரேஸில் இடம் பெற்றுள்ளார், அவர் தான் இயக்குநர் பாண்டிராஜ்.
அண்ணாத்த போன்ற கதை தான். ஆனால் அதை உணர்வுப்பூர்வமாகவும், நம்புகிற மாதிரி, யதார்த்தமாகவும் படமாக்கப்பட்டதே கடைக்குட்டி சிங்கமும், நம்ம வீட்டுப் பிள்ளையும். இரண்டுமே ஹிட்.
பாண்டிராஜ் இப்போது சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் ரஜினியை இயக்கலாம், சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கலாம் என்கின்றன செய்திகள்.
இது உண்மையாக இருந்தால் அண்ணாத்தயை விட ஒரு சிறந்த படம் ரசிகர்களுக்கு கிடைக்கும்.