இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதினைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறவுள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.