• Fri. Mar 29th, 2024

550 திரையரங்குகளில் வெளியாகும் ஆர்ஆர்ஆர்!

Mar 24, 2022

ராஜமௌலி பிரம்மாண்டங்களின் இயக்குநராக போற்றப்படுபவர். இவரது பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மற்றும் அதன் பிரம்மாண்டம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தவை.

தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் நாளைய தினம் உலகளவில் படம் ரிலீசாக உள்ளது.

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்ல் டிவிவி தானய்யா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் இந்தப் படம் நாளைய தினம் வெளியாகவுள்ளது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பிற்கிடையில் படம் ரிலீசாக உள்ளது.

தமிழகத்தில் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் படம் திரையிடப்பட உள்ளது. சுமார் 550 திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.

மொழிபெயர்ப்பு படங்களில் இத்தகைய எண்ணிக்கையில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

முன்னதாக தமிழகத்தில் வெளியான பாகுபலி படத்தை காட்டிலும் 150 திரையரங்குகள் அதிகமாக ஆர்ஆர்ஆர் படம் நாளைய தினம் வெளியாகவுள்ளது. படத்தில் ராம்சரண் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய அல்லூரி சீதாராம ராஜூவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார்.

இதேபோல ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். இவர் ஐதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி சுதந்திர போராட்ட காலத்தை நம்முடைய கண்முன்னே நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே ஆர்ஆர்ஆர் என்று முன்னதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார். படத்தில் மேலும் அஜய் தேவ்கன், ஒளிவியா மோரீஸ், சமுத்திரகனி, ஷ்ரேயா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்