இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வடிவேலு கூறுகையில் , ” மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள்.
என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். ஐந்து படங்களில் என்னை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். நல்ல நேரம் பொறந்தாச்சு. இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது ” என வைகைப்புயல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.