வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எனினும் படத்தின் கதாநாயகன் நடிகர் சிம்பு திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் சிம்பு கலந்து கொள்ளாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-
‘மாநாடு’ திரைப்படத்தில் வரும் மத அரசியல் காட்சி இந்தியாவையும், வாரிசு அரசியல் காட்சி தமிழ் நாட்டையும் இணைத்துள்ளது.
மாநாடு திரைப்படத்தின் வெற்றி நடிகர் சிம்புவிற்கு மிகப்பெரிய திருப்புமுனை. இன்று படப்பிடிப்பு இருந்தாலும் இங்கு அவர் வந்திருக்க வேண்டும்.
நடிகர்கள் வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது. படப்பிடிப்பில் நடந்து கொண்டதை போலவே, படம் வெளிவந்த பிறகும் இருந்தால் தான் நடிகர்களுக்கு வெற்றி தொடரும். ஒரு வெற்றிக்குப் பிறகு முன்பு இருந்ததைப் போலவே இருக்க வேண்டும்.
அப்போது தான் மற்றொரு வெற்றி கிடைக்கும். தயாரிப்பாளர் உன்னை நம்பி எவ்வளவு முதலீடு செய்து உள்ளார். நீ வராமல் இருப்பது எனக்கு கஷ்டமாக உள்ளது” எனக் குறிப்பிட்டு பேசினார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த விமர்சனம் சினிமாத்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.