2022 அவுஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி 17 இல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் கூறி வந்தார்கள்.
உலகின் நெ.1 வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாததால் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் அவரால் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. இதுதொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்றன.
கடந்த வருடம் அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஜோகோவிச் வென்றார். ஆடவா் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் பட்டங்களை 9 முறை வென்றதோடு நடப்பு சாம்பியனாகவும் உள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்வதை ஜோகோவிச் உறுதி செய்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்கிற விதிமுறையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவுஸ்திரேலியாவுக்குச் செல்கிறேன் என இன்ஸ்டகிராமில் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.