பெரும்பாலானவர்கள் சமைப்பதற்கு முன் பருப்பை கழுவி விட்டு தான் சமைப்பர். விரைவாக சமைக்க நினைப்போர் பலரும் அதனை ஊற வைக்க மறந்து விடுவர். ஆனால், பருப்பை ஊற வைத்துவிட்டு தான் பின்னர் சமைக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
பருப்பை ஊற வைக்கும்போது பருப்பில் இருந்து உருவாகும் வாயு உற்பத்தி செய்யும் இரசாயனங்கள் நீக்கப்பட்டு விடும்.
பெரும்பாலான பருப்பு வகைகளில் ஒலிகோசாக்கரைடுகள் உள்ளன.
அவை ஒரு வகையான சிக்கலான சர்க்கரை ஆகும். இது தான் உங்களுக்கு தசை வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. இதனைக் குறைக்க பருப்பினை ஊற வைத்து சமைப்பதே மிகவும் நல்லது.
மேலும், பருப்புகளை ஊறவைத்து சமைப்பதன் மூலம் பருப்பு விரைவில் சமைக்கப்பட்டு விடும்.
பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, மைசூர் பருப்பு போன்ற முழு வகை பருப்புகளை 8 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அதேபோல், பாதியாக உடைக்கப்பட்ட பருப்பு வகைகளை 6 முதல் 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
ராஜ்மா, சன்னா, மொச்சை போன்ற பெரிய அளவிலான பருப்பு வகைகளை 12 முதல் 18 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அதனால் தான் பலரும் பருப்புகளை இரவு முழுவதும் ஊற வைத்து விட்டு பின்னர் சமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
அதேபோல் ராஜ்மா போன்ற ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பீன்ஸ் வகை பருப்புகளை சாப்பிட உகந்த நேரம் மதியம் தான். ஏனெனில், மதிய நேரத்தில் சாப்பிட்டால் தான் அவை எளிதாக ஜீரணமாகும்.
பருப்பு ஊறவைத்த தண்ணீரில் டானின்கள் அல்லது பைடிக் அமிலம் போன்றவை நிறைந்து உள்ளதால், அந்தத் தண்ணீரை சமையலில் பயன்படுத்தக் கூடாது.
பலரும் அந்தத் தண்ணீரை சமையலில் பயன்படுத்துவர். அது தவறான செயல் ஆகும். அதனைப் பயன்படுத்த சிறந்த வழி அதனை செடிகளுக்கு ஊற்றி விடுவது தான் சரியான வழி. இதன் மூலம் வீட்டு தாவரங்களுக்கும் சில வகை ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.