• Tue. Sep 10th, 2024

2020 ஒலிம்பிக்; தகர்ந்தது நிமாலியின் எதிர்பார்ப்பு; ஏமாற்றத்துடன் வெளியேற்றம்

Jul 30, 2021

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் நிகழ்ச்சிக்கான 4ஆவது தகுதிகாண் ஓட்டப் போட்டியில் மிக மோசமான நேரப் பெறுதியைப் பதிவுசெய்து கடைசி இடத்தைப் பெற்ற நிமாலி லியனஆராச்சி பெரும் ஏமாற்றத்துடன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இம் முறை ஒலிம்பிக் போட்டியில் முதலாம் சுற்றுடனேயே வெளியேறிய 7ஆவது இலங்கை போட்டியாளர் நிமாலி ஆவார்.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 32ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 8ஆவது நாளான இன்று தடகளப் போட்டிகள் ஆரம்பமானது.

இன்றைய தினம் 6ஆவது தடகள நிகழ்ச்சியாக நடைபெற்ற மகளிருக்கான 800 மீற்றர் தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியில் இலங்கையின் நிமாலி லியனாரச்சி பங்கேற்றார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச்சுற்றில் நிமாலி கரையேறி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 8 பேர் பங்குபற்றிய 4ஆவது தகுதிகாண் போட்டியை நிமாலி 2 நிமிடங்கள் 10.23 செக்கன்களில் ஓடி கடைசி இடத்தைப் பெற்று பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இந்தத் தகுதிகாண் போட்டியில் அமெரிக்காவின் ரேவின் ரொஜர்ஸ் 2 நிமிடங்கள் 01.42 செக்கன்களில் முதலாம் இடத்தைப் பெற்றார்.

பிரத்தானிய வீராங்கனை கீலி ஹொஜ்கின்சன் (2:01.59) இரண்டாம் இடத்தையும் கென்ய வீராங்கனை மேரி மோரா (2:01.66) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இப் போட்டியின் முதல் 400 மீற்றர்களை 1 நிமிடம் 02.2 செக்கன்களில் கடந்த நிமாலி, அப்போது 5ஆவது இடத்தில் இருந்தார். அதன் பின்னர் அவரது வேகம் குறைந்து கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் மொத்தமாக 6 தகுதிகாண் போட்டிகள் நடைபெற்றன. 4ஆவது தகுதிகாண் போட்டியில் கடைசி இடத்தைப் பெற்ற நிமாலி, 6 தகுதிகாண் போட்டிகளிலும் பங்குபற்றிய 46 வீராங்கனைகளுக்கான ஒட்டுமொத்த நிலையில் 43ஆவது இடத்தையே பெற்றார்.

ஒவ்வொரு தகுதிகாண் போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற வீராங்கனைகளும் ஏனையவர்களில் அதிசிறந்த நேரப்பெறுதிகளைப் பதிவுசெய்த 6 வீராங்கனைகளுமாக 24 பேர் அரை இறுதிகளுக்கு முன்னேறினர்.

மேலும் இன்றைய தினம் அவர் பதிவு செய்த நேரப்பெறுதி அவரது தனிப்பட்ட மிகமோசமான நேரப் பெறுதியாகும்.

கத்தார், தோஹாவில் 2019இல் நடைபெற்ற ஆசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப்பில் 800 மீற்றர் போட்டியில் அவர் பதிவு செய்த 2 நிமிடங்கள், 08.69 செக்கன்களே இதற்கு முன்னர் அவரது மோசமான நேரப் பெறுதியாக இருந்தது.