• Tue. Jul 23rd, 2024

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: காயம் காரணமாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகல்

Aug 23, 2021

இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் திகதி துவங்கியது.

இப்போட்டியில், நான்கு நாட்களில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருந்த நிலையில் கடைசி நாளில் இந்திய டெய்ல் என்டர்ஸ் பும்ரா, ஷமி இருவரும் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இங்கிலாந்து எதிராக மெகா இலக்கை நிர்ணயம் செய்தார்கள்.

இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 272 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கி, அனைத்து விக்கெட்டையும் இழந்து 120 ரன்கள் மட்டும் சேர்த்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹெட்டிங்லியில் துவங்க உள்ளது. இரண்டாவது டெஸ்டில் அபார வெற்றிபெற்றுள்ள இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்ட்களிலும் வென்று 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இருக்கிறது.

இந்நிலையில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் காயங்கள் காரணமாக தொடரில் இருந்து விலகினர்.

சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் தனது மன நலனில் கவனம் செலுத்த காலவரையற்ற இடைவெளியை எடுத்து கொண்டார்.

தற்போது இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் வெளியேறி உள்ளது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.