• Mon. Jul 22nd, 2024

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

Sep 3, 2021

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் டல்லன் கிரிக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஜப்பானின் கெய் நிஷிகோரியும் அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்ட்டும் பலப்பரீட்சை நடத்தினர்.

இப்போட்டியில், 7-6, 6-3, 6-7, 2-6, 6-3 என்ற செட் கணக்குகளில் கெய் நிஷிகோரி போராடி வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல பெண்களுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ் கோவா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.

இப்போட்டியில், 7-5, 6-7, 7-6 என்ற செட் கணக்குகளில் கரோலினா பிளிஸ் கோவா, வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

பெண்களுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில், கனடாவின் பியன்கா அண்ட்ரெஸ்கு, அமெரிக்காவின் லோரன் டேவிசை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில், பியன்கா அண்ட்ரெஸ்கு வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.