• Tue. Mar 26th, 2024

அஸ்வினுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்க கூடாது!

Aug 4, 2021

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் டிரண்ட் பிரிட்ஜில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெறாதது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் வீரர்கள் பலரே ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.

அதே போல் கிரிக்கெட் ரசிகர்களும் விராட் கோலியின் இந்த முடிவு முற்றிலும் தவறானது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான விவிஎஸ் லக்‌ஷ்மண்,
, ‘ரவிச்சந்திர அஸ்வின் மிக திறமையான பந்துவீச்சாளர், அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு தொடர்களில் மிக சிறப்பாகவும் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதில் அஸ்வினின் பங்கு முக்கியமானது.

அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாகூரை எடுத்துள்ளது தவறான முடிவு என நான் சொல்லவில்லை, ஆனால் 8வது இடத்தில் களமிறங்கினாலும் அஸ்வின் நம்பிக்கையாக விளையாடி போட்டியை மாற்றக்கூடியவர்’ என்று தெரிவித்துள்ளார்.