• Fri. Nov 22nd, 2024

இன்று கால் இறுதியில் இங்கிலாந்து – உக்ரைன்

Jul 3, 2021

யூரோ கால்பந்து தொடரில் இன்றுநள்ளிரவு 12.30 மணிக்கு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – உக்ரைன் அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து அணியானது உலகத் தரவரிசையில் 3-வதுஇடத்தில் உள்ளது. அதேவேளையில் உக்ரைன் அணி 24-வது இடம் வகிக்கிறது. லீக் சுற்றில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது.

மேலும் நாக்-அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஜெர்மனியை பந்தாடியிருந்தது. அதேவேளையில் உக்ரைன் அணி லீக் சுற்றில் இரு ஆட்டங்களில் தோல்வி கண்டு தனது பிரிவில் 3-வது இடத்தையே பிடித்திருந்தது. நாக்-அவுட் சுற்றில் சுவீடன் அணியை தோற்கடித்திருந்தது. இந்தத் தொடரில் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்று நாக்-அவுட் சுற்றில் விளையாடிய ஒரே அணி உக்ரைன் மட்டுமே.

யூரோ கால்பந்து வரலாற்றில் தற்போதுதான் முதன்முறையாக உக்ரைன் அணி கால் இறுதிச் சுற்றில் விளையாடுகிறது. அதேவேளையில் இங்கிலாந்து அணி 6-வது முறையாக கால் இறுதிச் சுற்றில் விளையாட உள்ளது. உக்ரைன் அணி 4 ஆட்டங்களில் 6 கோல்களை வாங்கியுள்ளது. ஆனால் இங்கிலாந்து ஒரு கோல் கூட எதிரணியை அடிக்க விடவில்லை.

உக்ரைனும், இங்கிலாந்து அணியும் இதுவரை 7 ஆட்டங்களில் மோதியதில் இங்கிலாந்து அணி 4 ஆட்டங்களில் வெற்றிகண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் உக்ரைன் வெற்றி பெற்றிருந்தது.

முன்னதாக இரவு 9.30 மணிக்கு பாகு நகரில் நடைபெறும் 3-வதுகால் இறுதி ஆட்டத்தில் செக்குடியரசு – டென்மார்மக் அணிகள் மோதுகின்றன.