• Sat. Jul 20th, 2024

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் – ஜேர்மனியை வென்றது பிரான்ஸ்

Jun 16, 2021

ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் எவ் குழுவுக்கான போட்டியில் முன்னாள் உலக சம்பியனும் முன்னாள் ஐரோப்பிய சம்பியனுமான ஜேர்மனியை நடப்பு உலக சம்பியன் பிரான்ஸ் 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டது.

மியூனிச், பவாரியா அலியான்ஸ் அரினா விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஜெர்மன் வீரர் மெட்ஸ் ஹமெல்ஸ் போட்டுக்கொடுத்த சொந்த கோல் பிரான்ஸை வெற்றிபெறச் செய்தது.

ஹமெல்ஸின் சர்வதேச கால்பந்தாட்ட வாழ்க்கை முடிந்து விட்டது என பயிற்றநர் ஜோக்கிம் லவ் கடந்த 2019இல் தெரிவித்திருந்தார்.

எனினும் ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிக்கு இம்முறை அவர் மீளழைக்கப்பட்டுள்ளார். அவரது மீள்வருகை ஜேர்மனியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் லூக்கஸ் ஹேர்னண்டெஸ் பரிமாறிய பந்தை ஹமெல்ஸ் தனது தலையால்; முட்டி திசை திருப்பமுயற்சித்தபோது பந்து அவரது சொந்த கோலுக்குள்ளேயே புகுந்தது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளிலும் வெற்றிபெறக்கூடிய அணியாக பிரான்ஸ் அனுமாணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், போட்டியின் பெரும் பகுதியில் பிரான்ஸ் உச்ச ஆற்றலை வெளிப்படுத்த முடியாத அணியாக காணப்பட்டது. ஏனெனில் கோல்போடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை பிரான்ஸ் கோட்டை விட்ட வண்ணம் இருந்தது.

ஒரு கட்டத்தில் போல் பொக்பா உதைத்த பந்து கோல்காப்பின் குறுக்குக் கம்பத்துக்கு மேலாக சென்றது. மற்றொரு சந்தர்ப்பத்தில் கிலியா எம்பாப்பே, கோலை நோக்கி உதைத்த பந்தை ஜேர்மன் கோல்காப்பாளர் மெனுவல் நோயர் தடுத்துநிறுத்தினார்.

அத்தோடு எம்பாப்பே, கரிம் பென்ஸிமா ஆகியோர் போட்ட கோல்கள் ஓவ்சைட் நிலையிலிருந்து போடப்பட்டதாக மத்தியஸ்திரினால் நிராகரிக்கப்பட்டது. ஏட்றியான் ரேபியட்டின் கோல் போடும் முயற்சியும் நூலிழையில் தவறிப்போனது.

மறுபுறத்தில் ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் பெரிய அளவில் கோல் போடும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. பிரான்ஸின் பின்கள வீரர்கள் அதற்கு இடமளிக்கவும் இல்லை.

இப்போட்டியின்போது பிரான்ஸ் வீரர் பொக்பாவின் தோளை ஜேர்மன் பின்கள வீரர் அன்டோனியோ ரூடிகர் கடித்திருக்கக்கூடும் என சொல்லப்பட்டபோதும் சலன அசைவுகளில் அப்படி ஒன்றும் தெரியவரவில்லை.