யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மைதானத்தில் நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் Denis Zakaria அடித்த சுய கோலால் ஸ்பெயினின் புள்ளி கணக்கு தொடங்கியது. 68-வது நிமிடத்தில் சுவீஸ் வீரர் Xherdan Shaqiri பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
தொடர்ந்து ஆட்டம் சமன் ஆன நிலையில் கூடுதல் நேரத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து பெனால்டி வாய்ப்பில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் போட்டனர். இறுதியில் ஸ்பெயின் வீரர் Mikel Oyarzabal வெற்றிகான கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 3-க்கு 1 என்ற பெனால்டி வாய்ப்பின் மூலம் ஸ்பெயின் முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனியின் முனிச் மைதானத்தில் நடந்த மற்றொரு கால் இறுதியில் பெல்ஜியம், இத்தாலி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியின் 31 மற்றும் 44-வது நிமிடத்தில் இத்தாலி வீரர்கள் Nicolo Barella, மற்றும் Lorenzo Insigne கோல் திருப்பினர்.
முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் Romelu Lukaku கோல் திருப்பினர். தொடர்ந்து 2-ஆம் பாதியில் பெல்ஜிய வீரர்கள் கோல் திருப்ப எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின. இறுதியில் 2-க்கு 1 என்ற கணக்கில் இத்தாலி வென்று 2-வது அணியாக அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.