இந்திய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மூன்று சதங்கள் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்த ஜோ ரூட், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றியின் மூலம் கேப்டனாகவும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் எடுக்காததால் வெறும் 78 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 121 ரன்களும், டேவிட் மாலன் 70 ரன்களும், துவக்க வீரர்களான ஹசீப் ஹமீத் 68 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
கடந்த போட்டிகளில் சொதப்பிய புஜாரா 91 ரன்களும், கேப்டன் விராட் கோலி 55 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜடேஜாவை (30) தவிர மற்றவர்கள் அனைவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் 278 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 76 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி சமநிலையையும் அடைந்தது.
இந்திய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சதங்கள் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்திருந்த ஜோ ரூட், இங்கிலாந்து அணியின் இந்த வெற்றியின் மூலம் கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக 27வது வெற்றியை பெற்று கொடுத்துள்ள ஜோ ரூட், இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக வெற்றிகள் பெற்று கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் முன்னாள் வீரர் மைக்கெல் வாகனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக அதிக வெற்றிகள் பெற்று கொடுத்த கேப்டன்கள் பட்டியல்;
ஜோ ரூட் – 27 வெற்றிகள்
மைக்கெல் வாகன் – 26 வெற்றிகள்
ஆண்டரியூ ஸ்ட்ராஸ் – 24 முறை
அலெய்ஸ்டர் குக் – 24 முறை
பீட்டர் மே – 20 முறை