• Sat. Jul 27th, 2024

இந்தியா-பிரான்ஸ் அணிகள் இன்று மோதல்

Feb 8, 2022

9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடர் பவ்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி, தனது முதல் கட்ட லீக் ஆட்டங்களில் பிரான்ஸ், தென்ஆப்பிரிக்காவை 2 முறை சந்திக்கிறது.

இந்த ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடக்கிறது. இன்று நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 13-வது இடத்தில் உள்ள பிரான்சுடன் மோதுகிறது.

இரு அணிகளும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் முதல்முறையாக சந்திக்கின்றன. கடைசியாக மோதிய உலக லீக் போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி இருந்தது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் துணைகேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில், ‘எங்களது இந்த சீசனை தரமான இரு அணிகளுக்கு எதிராக தொடங்குவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். நேர்மறையான தொடக்கம் கண்டு உத்வேகத்தை பெற விரும்புகிறோம். பிரான்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் விளையாடி நீண்ட காலமாகிறது. பிரான்ஸ் சிறந்த அணி என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே இந்த போட்டி எங்களுக்கு சவாலாக இருக்கும். இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்குவோம் என நம்புகிறேன்’ என்றார்.