இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கொழும்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பெர்னாண்டோ மற்றும் பனுகா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்ந்திருந்த போது சாஹல் தனது துல்லியமான பந்துவீச்சால் இந்த கூட்டணியை பிரித்தார்.
போட்டியின் 13வது ஓவரின் 2வது பந்தில் பனுகாவின் (36 ரன்கள்0 விக்கெட்டை வீழ்த்திய சாஹல், அதற்கு அடுத்த பந்திலேயே பனுகா ராஜபக்சேவின் (0) விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.
துவக்க வீரரான பெர்னாண்டோ 71 பந்துகளில் 50 ரன்கள் குவித்துவிட்டு விக்கெட்டை இழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாரித் அஸ்லான்கா இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சற்று சொதப்பினாலும், கடைசி நேரத்தில் சற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீகா கருணாரத்னே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இலங்கை அணி 275 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் , தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.