இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட க்ரூணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த சீனியர் வீரர்கள் அனைவரும் நடப்பு டி.20 தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டதால், இந்திய அணி அதிகமான இளம் வீரர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியது.
இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் ஷிகர் தவான் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் தேவ்தட் படிக்கல்லை (29) தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக அகிலா தனன்ஞனயா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.