• Sat. Jul 27th, 2024

இன்று தொடங்கும் ஐ.பி.எல் மெகா ஏலம்

Feb 12, 2022

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும்(12), நாளையும்(13) அரங்கேறுகிறது.

ஏலப்பட்டியலில் 370 இந்தியர், 220 வெளிநாட்டவர் என்று மொத்தம் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 229 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவர். வெளிநாட்டை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா-47, வெஸ்ட் இண்டீஸ்-34, தென்ஆப்பிரிக்கா-33, இங்கிலாந்து-24, நியூசிலாந்து-24, இலங்கை-23 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.

வீரர்களுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ்ந்தியாவின் அஸ்வின், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர், சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், அம்பத்தி ராயுடு, தேவ்தத் படிக்கல், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ், வெஸ்ட் இண்டீசின் வெய்ன் பிராவோ, இவின் லீவிஸ், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட், தென்ஆப்பிரிக்காவின் ரபடா, குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்தின் ஜாசன் ராய் உள்பட 48 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும். இந்த தொகையில் இருந்து இவர்களது ஏலம் தொடங்கும்.

20 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாகும். இதில் ஜாசன் ஹோல்டர், நிேகாலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்), தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ஆஸ்திரேலிய ேகப்டன் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், பேர்ஸ்டோ முக்கியமானவர்கள். ரூ.1 கோடிக்கான தொடக்க விலையில் இந்தியாவின் ரஹானே, டி.நடராஜன், மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, இலங்கையின் ஹசரங்கா, இங்கிலாந்தின் லிவிங்ஸ்டன், தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் உள்பட 34 வீரர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் இந்திய மிடில்வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், அதிரடி விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வலுவான தொகைக்கு ஏலம் போவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக இருந்திருப்பதால் சில அணிகள் அவரை கேப்டனாக்க விரும்புகின்றன. நேற்றைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கூட 80 ரன்கள் விளாசினார். இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.20 கோடி வரை ஏலத்தில் எடுக்க தயாராக இருப்பதாக சம்பந்தப்பட்ட ஒருவா் தன்னிடம் தெரிவித்தார்’ என்று கூறியுள்ளாா். இது போல் நடந்தால் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக அவர் இருப்பார்.

இதே போல் 23 வயதான இஷான் கிஷனுக்கும் அதிக போட்டி இருக்கும் போது அவரது விலையும் தாறுமாறாக உயரும் என்று நம்பப்படுகிறது. 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் வென்ற போது அந்த அணியில் அதிகபட்ச ரன்களை குவித்தவர் (30 சிக்சர் உள்பட 516 ரன்) இவர் தான். வேகப்பந்துவீச்சுடன் கணிசமாக ரன் எடுக்கும் திறன் படைத்த தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், சுழல் சூறாவளி யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் ‘மதிப்பும்’ மில்லியன் டாலரை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 30 வீரர்களும் உண்டு. இவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் ஆகியோர் நிச்சயம் ஏலம் போவார்கள். ரூ.30 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட ஷாருக்கான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடி. இதனால் அவரை பெரிய தொகைக்கு இழுக்க அணிகள் வரிந்து கட்டும்.

கடந்த ஐ.பி.எல்.-ல் அதிக விக்கெட் வீழ்த்தியவரான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மற்றும் அவேஷ்கான், பேட்ஸ்மேன்கள் தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, திரிபாதி விலையும் கிடுகிடுவென உயரலாம். ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலக்கிய கேப்டன் யாஷ் துல், ஆல்-ரவுண்டர் ராஜ் பாவா, வேகப்பந்து வீச்சாளர் ரவிகுமார் ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

வெளிநாட்டு வீரர்களில் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக், காஜிேசா ரபடா, வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர், ஒடியன் சுமித் போன்றோருக்கு ‘ஜாக்பாட்’ காத்திருக்கிறது. மறுபடியும் பார்முக்கு திரும்பியுள்ள அதிரடி வீரர் வார்னரை 3 அணிகள் குறி வைத்துள்ளதாக தெரிகிறது. அவர் ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடி வரை ஏலம் போகலாம். இதேபோல் ஆல்-ரவுண்டராக அசத்தி வரும் ஜாசன் ஹோல்டரும் இந்த முறை ரூ.10 கோடியை தாண்டினாலும் ஆச்சரியமில்லை.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.90 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்கவைத்த வீரர்களுக்கான ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் ஏலத்தில் பயன்படுத்த முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), டோனி (ரூ.12 கோடி), மொயீன் அலி (ரூ.8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி) ஆகியோரை தக்கவைத்த வகையில் ரூ.42 கோடி போய் விட்டது. எனவே மீதமுள்ள ரூ.48 கோடியை கொண்டு தான் சென்னை அணி மற்ற வீரர்களை வாங்குவார்கள். ஏலத்தில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் ரூ.72 கோடி கையிருப்பில் வைத்துள்ளது.

முதல் நாளில் 161 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். இங்கிலாந்தை சோ்ந்த ஹியூக் எட்மீட்ஸ் ஏலத்தை நடத்துகிறார். பகல் 12 மணிக்கு தொடங்கும் ஏலம் நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.