• Sat. Jul 20th, 2024

அஸ்வினின் சாதனையை தகர்த்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

Aug 13, 2021

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 12) துவங்கியது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 83 ரன்கள் எடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தார். இதன்பின் வந்த புஜாரா 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அடுத்து வந்த விராட் கோலி, கே.எல் ராகுலுடன் இணைந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 103 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

விராட் கோலி விக்கெட்டை இழந்தாலும் கே.எல் ராகுல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமும் அடித்தார். கே.எல் ராகுலின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் போட்டியின் முதல் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி 276 ரன்கள் எடுத்திருந்தது.

127 ரன்களுடன் களத்தில் இருந்த கே.எல் ராகுல், இன்றும் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பிய நிலையில், கே.எல் ராகுல் இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

ஓலி ராபின்சன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த கே.எல் ராகுல், இரண்டாவது பந்தில் சிப்லேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கே.எல் ராகுல் விக்கெட்டை இழந்த அடுத்த சில நிமிடங்களில் ரஹானேவும் (1) நடையை கட்டினார். இதன்பின் வந்த ரிஷப் பண்ட் 37 ரன்களும், நீண்ட நேரம் தன்னந்தனியாக போராடிய ஜடேஜா 120 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதே போல் ஓலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்

இந்தநிலையில், இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் இதன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் 31வது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சன் இதன் மூலம், அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் அஸ்வினை (30) பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதே போல் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.