• Sun. Nov 17th, 2024

தென் ஆப்பிரிக்கா-இந்தியா டெஸ்ட் போட்டி; ரசிகர்கள் இன்றி நடத்த கூட்டு முடிவு

Dec 20, 2021

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி கடந்த 17ந்தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 8ந்தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவாகியிருந்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

வீரர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் தென் ஆப்பிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு வெளியிட்டார்.

இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 17ந்தேதி துவங்குவதாக இருந்த டெஸ்ட் போட்டிகள் அதற்கு பதிலாக, வருகிற 26ந்தேதி தொடங்க உள்ளது.

இந்த முடிவு, பி.சி.சி.ஐ. அமைப்பின் 90வது வருடாந்திர பொது கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று, ஒரு நாள் போட்டி தொடரும் நடைபெறும். எனினும், டி20 போட்டி தொடர் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவலை முன்னிட்டு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் பி.சி.சி.ஐ. இணைந்து எடுத்துள்ள கூட்டு முடிவின்படி, வீரர்களையும் மற்றும் போட்டிகளை பாதுகாப்புடன் நடத்திடவும் டெஸ்ட் தொடரில் டிக்கெட் விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் கொரோனா எண்ணிக்கை உயர்வு மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 4வது அலை பரவலை முன்னிட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன்படி, அனைத்து போட்டிகளும் சூப்பர்ஸ்போர்ட் சேனலில் ஒளிபரப்பப்படும். அதனை ரசிகர்கள் காணவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரசிகர்கள் போட்டியை காண்பதற்கான வேறு சில வழிகளுக்கும் ஒப்புதல் கிடைத்தவுடன் அதுபற்றி அறிவிக்கப்படும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

இதனால் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி தொடரானது, ரசிகர்கள் இன்றி பாதுகாப்புடன் கூடிய இடத்தில் நடத்தப்பட உள்ளது.