• Sat. Jul 20th, 2024

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோகித் சர்மா விலகல்

Dec 13, 2021

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய சோதனை மற்றும் லேசான பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி மட்டும் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்ய அழைத்து சென்றனர். பின்னர் ரோகித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ தனது டுவிட்டரில், “மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின் போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் இடம்பிடித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, பிரியங்க் பஞ்சால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், எம்.டி. சிராஜ்” என்று அதில் பதிவிட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்க தொடரில் இல்லை என்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ரோகித் சர்மா விலகியுள்ளதால் அவருக்கு பதிராக 30 வயதான பிரியாங் பஞ்சால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரியாங் பஞ்சால் தென்னாப்பிரிக்கா ஏ தொடரில் இந்திய ஏ அணியை வழிநடத்தி அதிபட்சமாக 96 ரன்களை சேர்த்தார், உள்ளூர் போட்டியில் அனுபவ வீரராக பார்க்கப்பட்ட பிரியாங் பாஞ்சலுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.