• Thu. Nov 21st, 2024

கம்பீரமாக வீறுநடை போடும் ராஜஸ்தான் ராயல்ஸ்

Apr 5, 2022

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக வீறுநடை போடுகிறது.

மும்பை அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்து அசத்தியதுடன் அணி 193 ரன்களை எட்டவும் வழிவகுத்தார். அந்த ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் அனைவரும் அபாரமாக செயல்பட்டு மும்பை அணியை 170 ரன்னுக்குள் முடக்கினார்கள்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தன்னுடைய முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் பணிந்தது. அடுத்த ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை சாய்த்தது. அந்த ஆட்டத்தில் 128 ரன்னில் கொல்கத்தாவை சுருட்டிய பெங்களூரு அணி 4 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டியது.

பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக செயல்பட்டாலும் அந்த அணியின் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து நிற்கவில்லை. தொடக்க வரிசை பேட்டிங்கில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.

ராஜஸ்தான் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்க அதிக ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் பெங்களூரு அணியும் தங்களது உத்வேகத்தை தொடர எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும். எனவே சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.