• Fri. Mar 29th, 2024

ஹாக்கியில் சொதப்பிய மகளிர் அணி; இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!

Jul 24, 2021

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆடவர் அணி அசத்திய நிலையில் மகளிர் அணி ஏமாற்றம் அளித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி, நெதர்லாந்திடம் படு மோசமாக தோல்வியை சந்தித்துள்ளது.

இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே நெதர்லாந்து ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே ஃபெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய அந்த அணி, முதல் கோல் அடித்து 1-0 என்று முன்னிலை பெற்றது. இதனையடுத்து வேகமெடுத்த இந்திய அணியில் ராணி ராம்பால் ஒரு கோலை அடித்து 1 – 1 என புள்ளிகளை சமநிலை படுத்தினார்.

பின்னர் சிறிது நேரத்திற்கு இரண்டு அணிகளுமே கோல்களை செல்லவிடாமல் தடுப்பாட்டம் ஆடி வந்தன. பிறகு நெதர்லாந்து அணிக்கு லட்டை கொடுத்தது போல மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட அந்த அணி 2வது கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலுக்கு பிறகு இந்திய அணியால் மீண்டு வர முடியவில்லை.

நெதர்லாந்து அணி ஆக்ரோஷ ஆட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்ததால் ஒருகட்டத்தில் இந்திய அணி நம்பிக்கையை இழந்தது போல மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நெதர்லாந்து அணிக்கு அடுத்தடுத்து 3 கோல்கள் கிடைக்க, இறுதியில் 5 -1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா 3 -1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. மேலும் இந்திய ஆண்கள் அணிக்கான காலிறுதிப்போட்டி நாளை தொடங்குகிறது.