பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 290 நாட்களுக்கு பிறகு அதிலிருந்து மீண்டுவந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனின் பிரிஸ்டல் நகரத்தை சேர்ந்த டேவ் ஸ்மித் என்ற 72 வயது முதியவரின் கொரோனா அனுபவம் மிகவும் வேறுபட்டதாக உள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட நபராக நம்பப்படும் இவரை பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர்.
அதாவது, கொரோனா வைரஸால் முதல் முறையாக பாதிக்கப்பட்டு 290 நாட்களுக்கு பிறகே இவரது உடலில் இருந்து வைரஸ் தொற்று விலகியுள்ளது. தாம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 10 மாதங்களில் 43 முறை கொரோனா பரிசோதனை செய்ததாகவும் அத்தனை முறையும் கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவு வந்ததாகவும் இவர் கூறுவது ஆராய்ச்சியாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“என்னால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. நான் இன்றிரவே உயிரிழந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை” என்று தமது மனைவியிடம் பலமுறை கூறியதாக டேவ் கூறுகிறார்.
மேலும், தாம் ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும்போதும், உறங்கிக்கொண்டிருக்கும்போது அமைதியாக உயிர் பிரிந்துவிடக்கூடாதா என்று எண்ணியதாக கூறுகிறார்.
தமது கணவரின் சூழ்நிலையை புரிந்துகொண்ட லிண்டா ஸ்மித், அவர் மீண்டுவருவது கடினம் என்று கருதியதுடன், ஒருவேளை இறப்பு நேர்ந்தால் என்ன செய்வது என்பது குறித்தும் தாங்கள் பலமுறை ஆலோசித்ததாகக் கூறுகிறார்.
இவர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 290 நாட்களில் அறிகுறிகள் அதிகமானதால் ஏழு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருமுறை ஐந்து மணிநேரம் விடமால் இருமிக் கொண்டே இருந்ததாகவும், தாம் உயிரிழந்துவிடுவேன் என்று பலமுறை கருதிய நிலையில், 44ஆவது முறையாக கொரோனா பரிசோதனை செய்தபோது, கடைசியில் நெகட்டிவ் என்ற முடிவு வந்தது தம்மையும் தமது மனைவியையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்ததாகவும் டேவ் கூறுகிறார்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், டேவ் 44ஆவது முறையாக கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என்று முடிவு வருவதற்கு முன்பாக அமெரிக்காவை சேர்ந்த ரெஜெனெரான் (Regeneron) என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் வேறுபட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொண்ட புதிய கலவையை செலுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
எனினும், இந்த மருந்துதான் அவர் பத்து மாதங்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கு காரணமா என்ற கேள்விக்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களாலோ அல்லது ஆராய்ச்சியாளர்களாலோ இதுவரை உறுதிபட பதில் தெரிவிக்க இயலவில்லை.
எனினும், ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இவர், கொரோனா வைரஸின் அபூர்வ பாதிப்பால் நீண்டகாலம் சிரமத்திற்கு உள்ளாகி, தற்போது அதிலிருந்தும் மீண்டு மறுவாழ்வு பெற்றுள்ளதை தமது மனைவியோடு சேர்ந்து கொண்டாடி வருகிறார்.