இந்தியாவில் கொரோனாவின் உருமாறிய ‘டெல்டா’ ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும் இதர வகை வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் ‘இன்சாகாக்’ அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அமைப்பான இன்சாகாக் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
”உலகளவில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் ஆயிரக்கணக்கானோர் பலியாக டெல்டா வைரஸ் தன் காரணம். தற்போதும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புதிய பாதிப்புகளுக்கு மூல காரணமாக டெல்டா வைரஸ் உள்ளது.
சிறப்பான சுகாதார நடவடிக்கைகளுடன் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய சிங்கப்பூர் போன்ற நாடுகளில் டெல்டா பாதிப்பு அதிகம் இல்லை.
இந்தியாவில் டெல்டா ஆதிக்கம் உள்ள போதிலும் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது 9.8 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது. இறப்பும் 0.4 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் எடுக்கப்பட்ட சளி மாதிரிகளில் கே77டி வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இது பரவும் வேகம், ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அதிக விபரங்கள் இல்லை” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.