மத்திய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தடுப்பூசிகளை வீணடிக்காமல், விரைவாகவும், முழுவதுமாகவும் செலுத்துவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இதுவரை தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து 1,80,32,170 தடுப்பூசிகள் பெறப்பட்ட நிலையில், 1,80,03,777 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், 3,42,820 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. அதாவது தமிழக சுகாதாரத்துறை ஒரு டோஸ் தடுப்பூசிகளை கூட வீணாக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழலாம். ஒரு குப்பிக்கு 10 டோஸ் என்ற கணக்கு இருப்பினும், ஒவ்வொரு குப்பியிலும் சற்று கூடுதலாகவே தடுப்பூசி மருந்து இருக்கும் எனவும் மிகச்சரியாக திட்டமிட்டு செலுத்தும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் நபர்களுக்கு செலுத்த முடியும் எனவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.