பிரபல நடிகை ஏமி ஜாக்சன் தனது காதலரை விட்டுப் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் நடிகையான ஏமி ஜாக்சன் ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் திருமணம் செய்து கொள்ளாமல் காதலர் ஜார்ஜ் பனாயிடூ என்ற தொழிலதிபருடன் வாழ்ந்து வந்தார்.
இதில் ஏமி ஜாக்சன் கர்ப்பமானார். அவருக்கு 2019-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து ஜார்ஜ் பனாயிடூ – ஏமி ஜாக்சன் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில் காதலருடன் இருப்பது, கர்ப்பமாக இருப்பது உள்ளிட்ட புகைப்படங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் ஏமி ஜாக்சன்.
இந்நிலையில் தற்போது தனது காதலர் ஜார்ஜ் பனாயிடூ சம்பந்தப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.
ஏமி தன் காதலரை விட்டுப் பிரிந்ததால்தான் இவ்வாறு செய்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் ஏமி ஜாக்சன் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.