ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர்.
நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.
மேலும் ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்றாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நீராட அனுமதி இல்லை. நதிக்கரை, ஆற்றங்கரைகளில் இன்று மக்கள் வழிபடவும், புனித நீராடவும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று எல்லோரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடுவோம்.
ஆடிப்பெருக்கு நாளில் விரதம் இருந்து கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.
சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.