• Wed. Nov 20th, 2024

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய நிதித்திரட்டும் 10 வயது சிறுவன்

Aug 10, 2021

சஜித்தன் குழந்தையில் இருந்தே தமிழை விரும்பி பேசத்தொடங்கியவர், உறவுகளுடன் உரையாடும் பொழுதெல்லாம் வலிந்தே தமிழில் உரையாடுவார்.

தனக்கு தெரியாத சொல்லை Google Translate மூலம் அறிந்து தமிழில் உரையாட தன்முயற்சியாலே முனைவார். தமிழை முறையாகப்படித்து வருகிறார். தற்போது வளர்தமிழ் 4 பரீட்சை எழுதியுள்ளார். இதுவரை அதிதிறனையும் தக்க வைத்திருக்கிறார். அதைவிட பாட்டு, திருக்குறள், பேச்சு,என போட்டிகளில் பங்குபற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டே வருகிறார்.

அவருடைய தாத்தா சிவகடாட்சம் ஈழ மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து இனந்தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்டவர். அந்த உணர்வும் அதன்மூலம் தமிழ்கள் அழிக்கப்பட்டு விடுவார்களோ என்ற பயம் இப்பொழுதும் அவருக்குண்டு.

லண்டன் போன்ற பழைமைகளைப்பேணும் நாட்டில் தமிழ்த்துறை உருவாவதால் தமிழை அழிக்க முடியாதென்பது அவருடைய நம்பிக்கை. இதை நாம் ஊட்டவில்லை தானாகவே ஊகித்து சொல்வார். அவருடைய தாயார் தமிழ்மொழியை சிறப்புப்பாடமாக கற்று இரண்டாம் உயர்நிலை வகுப்பில் சித்தியடைந்திருந்ப்பதை சஜித்தன் பிரமிப்பாகப்பார்த்து பெருமையாக சொல்லிக்கொள்வார்.

இவை எல்லாம் தான் அவருக்கு தமிழின் மேல் ஈர்ப்புவரக்காரணம்.அதனால் தானும் தமிழ்படிக்க நல்ல வாய்ப்பாக தமிழ்துறை ஏற்படப்போவதைப் பார்க்கிறார்.அதற்காக இந்த நடை தொண்டுக்கு தனது 10வது பிறந்தநாள் (04.08.2021) பரிசாக தான் நிதி சேகரிப்பில் ஈடுபட விரும்பி தனக்கு பிறந்தநாட் கொண்டாட்டத்திற்காக ஏற்படும் சொலவை தமிழ்த்துறைக்கு கொடுக்கும்படி பெற்றோரைக் கேட்டிருந்தார்.

அதன் வெளிப்பாடாக பெற்றோரும் புளகாகிதம் அடைந்து அவருக்காக அந்த நல்ல முயற்சியில் இறங்கினர்.அவர் தனது பெற்றோரின் நண்பர்கள் தனது உறவினர்கள் என பலரிடமும் தானே குரற்செய்தி மூலமும் தொலைபேசி அழைப்பின் மூலமும் தொடர்பு கொண்டு நிதி சேர்த்து வருகிறார்.