ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கான் தலிபான்கள் வசமான நிலையில் 20 ஆண்டுகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது.
இந் நிலையில் அமெரிக்க இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய 6 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டர்களை தலிபான்கள் கந்தகாருக்கு மேலாக செலுத்துவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானிற்கான ஐஎஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ ஊடகம் என தன்னை தெரிவித்துக்கொள்ளும் தலிப் டைம்ஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் புறப்படுவதற்கு முன்னர் கந்தஹாரின் மேல் அமெரிக்க ஹெலிக்கொப்டரை தலிபான்கள் செலுத்துவதையும் ஹெலிக்கொப்டரிலிருந்து ஒருவர் தொங்குவதையும் வீடியோ காண்பித்துள்ளது.
தலிபான்கள் 200,000 ஆயுதங்களையும் 20.000 இராணுவவாகனங்களையும் நூற்றுக்கணக்கான விமானங்களையும் ஆப்கான் இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஹெலிக்கொப்டர்களை தலிபான்கள் ஓட்டிப்பார்க்கும் படங்கள் வெளியாகியிருந்தன.