தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவினாலும் கூட அதனை எதிர்கொள்ளும் வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டாக்டா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
அதன்படி, உயிர் காக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்பு இருப்பதாக அவா் கூறியுள்ளாா்.
உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் தீநுண்மி தொற்று தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், சீனா, பிரேசில் உள்பட 12 நாடுகளில் பரவியுள்ளது. வழக்கமான கொரோனா தொற்றைக் காட்டிலும் அதி தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படுகிறது ஒமைக்ரான் தீநுண்மி.
இதை அடுத்து, உள்நாட்டிலும், தமிழகத்திலும் அந்த வகை பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.