பாகிஸ்தானின் சியால்கோட், வசிராபாத் வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கையர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புயை 800 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான சந்தேக நபரைக் கைது செய்துள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார், குறைந்தது 800 பேர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய சந்தேக நபரான ஃபர்ஹான் இத்ரீஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
பிரியந்த குமார கொலை செய்யப்பட்ட போது தொழிற்சாலைக்குள் தடிகளுடன் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட குழுவினர், கொலைக்குப் பின்னர், அவரது உடலை தெருவில் இழுத்துச் சென்தாகவும் போதிய பொலிஸார் இல்லாமையால் கூட்டத்தை நிறுத்த முடியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பிரஜை கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையை பஞ்சாப் பொலிஸார், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையின்படி, தொழிற்சாலை முகாமையாளர்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்ட குறைந்தது 112 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.