• Fri. Oct 18th, 2024

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் உபயோகம்

Dec 7, 2021

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல இடங்களில் கோக்கைன் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டதை அடுத்து, பாராளுமன்ற அதிகாரிகள் காவல்துறையை அழைத்துள்ளனர்.

நாடாளுமன்ற கட்டிடங்களுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டதையடுத்து தான் பொலிஸாரை தொடர்பு கொண்டதாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல்(Lindsay Hoyle) தெரிவித்தார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு அருகிலுள்ள கழிவறை உட்பட அங்கீகாரம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே அணுகக்கூடிய 11 இடங்களில் போதைப்பொருள் கண்டறிதல் துடைப்பான்களைப் பயன்படுத்தி சோதனை வேர்கொண்டதில் கோக்கைன் (Cocaine) தடயங்களைக் கண்டறிந்ததாக சண்டே டைம்ஸ் செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் செய்தித் தொடர்பாளர், மேக்ஸ் பிளேன், செய்திகளில் வெளியாகியுள்ள அறிக்கைகள் “கவலைக்குரிய” என்று கூறினார்.

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் ஒரு புதிய மூலோபாயத்தை அறிவித்துள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயே இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் பாவனை குறித்த அறிக்கைகள் ஆச்சரியமளிக்கவில்லை என பொலிஸ் அமைச்சர் கிட் மால்ட்ஹவுஸ் (Kit Malthouse) தெரிவித்துள்ளார்.