சிவகார்த்திகேயனின் முதல் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்தில் நாயகியாக வெளிநாட்டு நடிகையொருவர் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் கடைசிப் படமான டாக்டர் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழக திரையரங்குகளில் படம் 70 கோடிகளை கடந்ததாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறுகின்றனர்.
உலக அளவில் படம் 100 கோடிகளை கடந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே சிவகார்த்திகேயன் படங்களில் அதிகபட்சம்.
சிவகார்த்திகேயனின் தெலுங்கு மார்க்கெட்டும் படத்துக்குப் படம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் அவர் நடிக்கிறார்.
தெலுங்கின் முக்கிய இளம் இயக்குனர்களில் ஒருவரான அனுதீப் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த வருடம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஜதி ரத்னலு படத்தை இயக்கியவர் இவர்.
நவீன் பொலிஷெட்டி நடித்திருந்த இந்தப் படம் அதன் நகைச்சுவைக்காக விரும்பிப் பார்க்கப்பட்டது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் ரொமான்டிக் காமெடியாகவே அனுதீப் இயக்க உள்ளார். தெலுங்கு, தமிழில் இப்படம் தயாராகிறது.
டான் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் சிங்கப்பாதை மற்றும் அனுதீப்பின் படம் என இரு படங்களில் நடிக்க உள்ளார்.
இதில் அனுதீப் படத்தின் கதைப்படி சிவகார்த்திகேயன் வெளிநாட்டுப் பெண்ணை காதலிப்பதாக வருகிறதாம். அதற்காக வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்க இருக்கிறார்கள்.
யாரை நடிக்க வைப்பது என்ற தேடுதல் படலம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.