• Fri. Nov 15th, 2024

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; காலிறுதியில் தமிழ்நாடு அசத்தல்

Dec 21, 2021

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் களம் கண்டன.

இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் பாபா 13 ரன்களில் வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசன் சதம் விளாசினார்.அவர் 102 ரன்கள் (101 பந்துகள், 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.

அணியில் ரவிஸ்ரீனிவாசன் (61), தினேஷ் கார்த்திக் (44), இந்திரஜித் (31), விஜய் சங்கர் (3), வாஷிங்டன் சுந்தர் (0), சித்தார்த் (0) ரன்களில் வெளியேறினர்.

மற்றொரு தமிழக வீரரான ஷாருக் கான் அதிரடியாக ஆடி 79 ரன்கள் (39 பந்துகள், 6 சிக்சர்கள், 7 பவுண்டரிகள்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 50 ஓவர் முடிவில், தமிழக அணி 8 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் சேர்த்தது.

கர்நாடக அணியில் பிரவின் தூபே 3 விக்கெட்டுகளையும், எம் பிரஷித் 2 விக்கெட்டுகளையும், வைஷக் மற்றும் கரியப்பா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து கர்நாடக அணி 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

அந்த அணி தமிழக அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே சேர்த்தது.கர்நாடக அணியில் அதிகபட்சமாக ஓரளவு தாக்குபிடித்த எஸ் சரத் 43 ரன்கள் எடுத்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தமிழக அணியில் சிறப்பாக பந்துவீசிய ரகுபதி சிலம்பரசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு பக்கபலமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும், சாய் கிஷோர்,வாரியர் மற்றும் எம் சித்தார்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதன்மூலம், 151 ரன்கள் என்ற இமாலய ரன் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியது.