உள்ளூராட்சி தேர்தலை இந்த வருட இறுதியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான சட்டம் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு மாத்தளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று(18) இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய காலத்துக்கு நடத்த முடியாது என தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தேர்தலை ஒருவருட காலத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.
அரசியலமைப்பில் அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இந்த வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது.
அதன் பிரகாரம் இந்த வருடம் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த முடியுமாகும். தேர்தல் மக்களின் ஐனநாயக உரிமையாகும் அதனால் தேர்தல் ஆணைக்குழு என்ற வகையில் நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம்.
சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான தேவையான சூழல் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றிக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.