எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சபுகஸ்கந்த மற்றும் யுகதனவி மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நேற்று (20) ஸ்தம்பித்திருந்ததுடன், தேசிய மின்கட்டமைப்புக்கு 370 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டது.
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம், உலை எண்ணெய் மற்றும் டீசலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையில் எரிபொருள் இன்மையால் நேற்று (20) ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பு, 270 மெகாவாட் மின்சாரம் விநியோகத்தை இழந்தது.
அந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு எரிபொருள் எண்ணெய் இறக்குமதி செய்யப்படாத நிலையில், இதுவரை டீசலைப் பயன்படுத்தியே மின் உற்பத்தி நிலையம் இயங்கிவந்தது.
நேற்று (20) காலை சபுகஸ்கந்த ஏ மற்றும் பி மின் நிலையங்கள் எரிபொருள் கையிருப்பு முடிவடைந்ததன் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ள அதேவேளை, இதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்புக்கு 100 மெகாவாட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆலைகள் மூடப்பட்டதால், மொத்தமாக 370 மெகாவாட் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை இழந்துள்ளது.
நீர் மின் உற்பத்தியின் மூலம் பகல் வேளையில் இந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும் என்றாலும், இந்த நிலைமை இரவு வேளையில் மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என அறியமுடிகிறது.
நேற்று முன்தினம் (19) சனிக்கிழமை என்ற போதிலும் நாட்டின் மின்சாரத் தேவை அதிகபட்சமாக 2,470 மெகாவாட்டாக அதிகரித்திருந்தது.
நிலக்கரி உள்ளிட்ட அனல் மின் நிலையங்களால் நாட்டின் 76 சதவீத மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், நீர் மின் உற்பத்தி வெறும் 22 சதவீதமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.