• Wed. Nov 27th, 2024

சீனாவில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா

Mar 15, 2022

உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில் தான். அங்குள்ள உகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கிலும் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது.

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. நாட்டில் உள்ள 19 மாகாணங்களில் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது.

புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தாக்கத்தால் சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வந்தது.

இந்த சூழலில், சீனாவில் ஒரே நாளில் புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிலின் மாகாணத்தில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக சீனாவின் பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள ஷென்சென் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.