உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால், அந்த நாடு உருக்குலைந்து வருகிறது. இந்த பேரிடரில் இருந்து தப்புவதற்காக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இதைப்போல உக்ரைனின் உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.
அந்த வகையில் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்படிப்பு பயின்று வந்த சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர்.
உக்ரைனில் இன்னும் போர் முடிவுக்கு வராததால், நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவர்கள் படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் போர் காரணமாக படிப்பை பாதியில் விட்டு நாடு திரும்பிய இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டில் படிப்பை தொடர வைக்க ரஷியா விருப்பம் தெரிவித்து உள்ளது.
இதற்காக இந்திய மாணவர்கள் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை ரஷியா மற்றும் கிரீமியாவில் உள்ள ரஷிய பல்கலைக்கழங்கள் அணுகியுள்ளன.
கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவுத்தேர்வு இன்றியும் தங்கள் பல்கலைக்கழகங்களில் இந்த மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என ரஷிய பல்கலைக்கழகங்கள் அறிவித்து உள்ளன.
உயர்கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறிய தங்களின் கல்வி எதிர்காலம் பற்றிய விடை தெரியாமல் தவித்து வரும் மாணவர்களுக்கு ரஷியாவின் இந்த அறிவிப்பு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியா அறிவித்துள்ள இந்த உதவியை ஏற்கனவே கஜகஸ்தான், ஜார்ஜியா, அர்மீனியா, பெலாரஸ், போலந்து போன்ற நாடுகளும் வழங்க முன்வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, உக்ரைனில் போர் தொடங்கியதும், அங்கிருந்து நாடு திரும்ப விரும்பாத இந்திய மாணவர்கள் சிலர் நேரடியாக மால்டோவா சென்று, அங்குள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வியை தொடர்வது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுவரை சுமார் 140 மாணவர்கள் அந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருப்பதாக பேராசிரியர்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.